search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதான தம்பதி"

    சென்னையில் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் யார்? என்பதை கண்டறிவதற்காக கைது செய்யப்பட்ட தம்பதிக்கும், குழந்தைக்கும் நேற்று டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது.
    சென்னை:

    சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் சோமன். ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான இவரது மகன் யோகேஷ்குமாருக்கும், பத்மினி என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பத்மினி தான் கர்ப்பமானதாகவும், பெண் குழந்தையை பெற்றது போலவும் ஒரு குழந்தையோடு கணவன் வீட்டிற்கு வந்தார்.

    போலீஸ் அதிகாரி சோமனுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டு மருமகள் பத்மினி கர்ப்பமானது போல அடிக்கடி சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரியில் விசாரித்தார். அப்போது பத்மினி கர்ப்பமாகவில்லை என்பது தெரியவந்தது. இதனால் குழந்தை பெற்றதாக பத்மினி கூறியது பொய்யாக இருக்கலாம் என்று கருதி தனது மகன் யோகேஷ்குமார் மூலம் பத்மினி மீது எழும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் எழும்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், பத்மினி தான் குழந்தையை பெற்றெடுக்கவில்லை என்றும், வட மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஒருவரிடம் அந்த பெண் குழந்தையை தத்தெடுத்ததாகவும் தெரிவித்தார். தன்மீது வழக்குபதிவு செய்யப்பட்டதால், அதில் கைதாகாமல் இருக்க பத்மினி கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில், இந்த வழக்கை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். துணை கமிஷனர் மல்லிகா, கூடுதல் துணை கமிஷனர் சியாமளாதேவி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் விசாரணை நடத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில் பத்மினி வைத்திருந்த பெண் குழந்தை கடத்தல் குழந்தை என்று கண்டறியப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த குழந்தை கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.2 லட்சம் விலைகொடுத்து குழந்தையை பத்மினி வாங்கியதாகவும் தெரிகிறது.

    கடத்தல் கும்பலைச் சேர்ந்த ரிக்கி வர்மா (வயது 40), அவரது மனைவி கோமல் வர்மா (35), அஜய்சர்மா (40), அவரது மனைவி ஜெயா சர்மா (35) ஆகியோர் கடந்த 7-ந் தேதி அன்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் புதிய பிரச்சினை ஒன்று எழுந்தது. சம்பந்தப்பட்ட குழந்தையை அஜய்சர்மா, ஜெயாசர்மா ஆகியோரிடமிருந்து தத்தெடுத்ததாக பத்மினி போலீசார் விசாரணையில் தெரிவித்திருந்தார். அதுதொடர்பான சான்றிதழ்களையும் பத்மினி போலீசாரிடம் கொடுத்திருந்தார். எனவே சம்பந்தப்பட்ட குழந்தை கடத்தல் குழந்தையா? அல்லது அஜய்சர்மா, ஜெயாசர்மா தம்பதியின் குழந்தையா? என்பதை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டறிய போலீசார் முடிவு செய்தனர்.

    இதனால் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய போலீசார் கோர்ட்டு அனுமதி பெற்றனர். நேற்று புழல் சிறையில் இருந்து அஜய்சர்மாவும், அவரது மனைவி ஜெயாசர்மாவும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடந்தது.

    சம்பந்தப்பட்ட குழந்தையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. டி.என்.ஏ பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

    ×